சோலைமலை முருகன் கோவிலில் மண்டலாபிஷேக விழா
அழகர்மலையில் அமைந்துள்ள சோலைமலை முருகன் கோவிலில் மண்டலாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஆறாவது படை வீடாக போற்றப்படும் சோலைமலை முருகன் கோவிலில் கடந்த ஜூலை 5-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து தினந்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. அதன் நிறைவாக நேற்று சஷ்டி மண்டப வளாகத்தில் 48-வது நாள் மண்டல பூஜை நடைபெற்றது.இதையொட்டி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகளை நடத்தினர். நட்சத்திரம் மற்றும் ஓம் வடிவங்களில் 1,008 சங்குகள் அடுக்கப்பட்டு, அவற்றில் புஷ்பங்கள் இணைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டன.பின்னர் புனித தீர்த்தம் நிரப்பப்பட்ட கலசங்கள் வெள்ளி மயில் வாகனத்தில் வைத்து, மேளதாளங்கள் முழங்க, வர்ணக்குடை மற்றும் தீவட்டி பரிவாரங்களுடன் கோவில் சன்னதி பிரகாரத்தை சுற்றி வந்து மூலவர் சன்னதியை சென்றடைந்தன.அங்கு வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி, வித்தக விநாயகர் மற்றும் ஆதி வேல் சன்னதிகளில் புனித தீர்த்தம் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.