கேரளா கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் மணிக்கூண்டு இடிந்தது
கேரள மாநிலம் கோழிக்கோடு ரெயில் நிலையத்தில் நூற்றாண்டு பழமையான மணிக்கூண்டு கோபுரம் திடீரென இடிந்து விழுந்ததால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
நிலையத்தின் பழைய கட்டிடத்தை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கனமழைக்கு இடையே மணிக்கூண்டு அமைந்திருந்த பகுதி 2-வது நடைமேடையில் சரிந்து விழுந்தது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக அந்த பகுதி ஏற்கனவே தடுப்புகள் அமைத்து மூடப்பட்டிருந்ததால் உயிரிழப்போ, காயமோ ஏற்படவில்லை.
இடிபாடுகள் தண்டவாளம் மற்றும் நடைமேடையில் விழுந்ததால் 1, 2, 3-வது தண்டவாளங்களில் ரெயில் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
பின்னர் 4-வது தண்டவாளம் வழியாக மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டதால் பல ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில ரெயில்களின் புறப்பாடு மற்றும் நிறுத்துமிடங்களிலும் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டன.
இடிபாடுகளை அகற்றும் பணியை ரெயில்வே, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் படையினர் இணைந்து மேற்கொண்டனர். சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.