கரூர் கூட்ட நெரிசி விவகாரம்: அரசு வேலை நியமனத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக வெற்றிக் கழகம் நடத்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய பலரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில், கூட்ட நெரிசியில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் வகையில் கடந்த மாதம் 10-ஆம் தேதி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.இந்த நடவடிக்கையை எதிர்த்து, நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை நிர்வாகி தீரன் திரு முருகன், மதுரையைச் சேர்ந்த சீனி முகமது மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த சந்தோஷ் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கிய அரசாணையை கடந்த மாதம் 27-ஆம் தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று நடைபெறுகிறது.