இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே முக்கியம்: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தல்
இன்றைய இளைஞர்களை வழிதவறியவர்களாகவோ அல்லது திசையற்றவர்களாகவோ கருதக் கூடாது என்றும், அவர்களைப் புரிந்துகொள்ள கட்டளைகள் போதாது; திறந்த மனதுடன் உரையாடுவது அவசியம் என்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசியபோது, தாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்தில் பெரியவர்கள் கூறியவற்றை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை நிலவியதாக நினைவுகூர்ந்தார். ஆனால் தற்போதைய தலைமுறை பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது என்றும், அந்தக் கேள்விகளுக்கு பொறுமையுடனும் தெளிவுடனும் விளக்கம் அளிப்பதே பெரியவர்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.மேலும், இளைஞர்களிடம் அன்பும் அக்கறையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும், அவர்களுடன் நேரம் ஒதுக்கி தொடர்ந்து உரையாட வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தினார்.
குடும்பங்களில் பரஸ்பர உரையாடலுக்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அந்தச் சூழலை மீண்டும் உருவாக்குவது காலத்தின் தேவை என்றார்.இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற விரும்பினால், அவர்களுடன் தொடர்ச்சியான கலந்துரையாடலே வழி என்றும், உத்தரவுகள் உறவை வலுப்படுத்தாது; கருத்துப் பரிமாற்றமும் பரஸ்பர புரிதலுமே நல்ல உறவை உருவாக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை முன்னிட்டு மாணவர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தை அவர் தனது உரையில் நேரடியாக குறிப்பிடவில்லை. இருப்பினும், தற்போதைய சூழ்நிலையை மறைமுகமாக அவரது கருத்துகள் சுட்டிக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.