இந்திய வம்சாவளியினர் இருவர் பிரிட்டன் அமைச்சரவையில் இடம்
பிரிட்டனில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மர் பிரதமராக பொறுப்பேற்றார். 2024 ஜூலை 5 முதல் பிரதமராக இருந்த அவர், உள்ளாட்சி தேர்தலில் தொழிலாளர் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, கடந்த ஜூன் 22 அன்று பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.இதையடுத்து நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில், 56 வயதான ஆண்டி பர்ன்ஹாம் போட்டியின்றி கட்சியின் புதிய தலைவராகவும், பிரதமர் பதவிக்குமான வேட்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், கெய்ர் ஸ்டார்மர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் சார்லஸிடம் வழங்கினார். புதிய அரசை அமைக்குமாறு மன்னர் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்ட ஆண்டி பர்ன்ஹாம், பிரிட்டனின் 59-வது பிரதமராக நேற்று பதவியேற்றார்.ஆண்டி பர்ன்ஹாமின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கனிஷ்கா நாராயண் (36) மற்றும் லிசா நந்தி (46) ஆகியோருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.பீகாரின் முசாபர்பூரில் பிறந்த கனிஷ்கா நாராயண், 12 வயதில் தனது பெற்றோருடன் பிரிட்டனின் கார்டிஃப் நகருக்கு குடிபெயர்ந்தார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் கல்வி பயின்ற அவர், தற்போது பிரிட்டனின் முதல் செயற்கை நுண்ணறிவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அமைச்சரவையில் கலாசாரத் துறை அமைச்சராக இருந்த லிசா நந்தி, புதிய அமைச்சரவையிலும் அதே பொறுப்பில் தொடர்கிறார். மான்செஸ்டரில் பிறந்த லிசா நந்தியின் தந்தை தீபக் நந்தி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்.