இந்திய எல்லை அருகே 5வது தலைமுறை போர் விமானங்களை குவித்த சீனா
இந்தியா மற்றும் சீனா இடையே சுமார் 4,000 கிலோமீட்டர் நீளமான எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லை லடாக்கில் இருந்து அருணாசலப் பிரதேசம் வரை விரிந்துள்ளது.ஆசியாவில் தனது ஆதிக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் சீனா, அண்டை நாடுகளுடன் அடிக்கடி பதற்றமான அணுகுமுறையை கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக, ஆசியாவில் முக்கிய போட்டியாளராகக் கருதப்படும் இந்தியாவை நோக்கிய ராணுவ நடவடிக்கைகளிலும் கவனம் செலுத்தி வருகிறது.இந்த நிலையில், இந்திய எல்லையை ஒட்டியுள்ள தனது விமானப்படைத் தளங்களில் சீனா 5வது தலைமுறை ஜே-20 ஸ்டெல்த் போர் விமானங்களை நிறுத்தியிருப்பது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.தகவலின்படி, மொத்தம் 12 ஜே-20 ரக போர் விமானங்கள் இரண்டு விமானத் தளங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தின் இறுதிப் பகுதியிலும், ஜூலை மாதத்தின் தொடக்கத்திலும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் இந்த விமானங்கள் பதிவாகியுள்ளன.
இந்தியாவை முன்னிறுத்தி ஒரே நேரத்தில் இத்தனை ஜே-20 போர் விமானங்கள் குவிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.சின்ஜியாங் மாகாணத்தின் ஹோட்டான் விமானத் தளத்தில் எட்டு ஜே-20 போர் விமானங்கள் காணப்பட்டுள்ளன. இந்தத் தளம் இந்தியாவின் லே நகரத்திலிருந்து சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மேலும், திபெத்தில் உள்ள டாம்சுங் விமானத் தளத்தில் நான்கு ஜே-20 போர் விமானங்கள் இருப்பதும் செயற்கைக்கோள் படங்களில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தளம் அருணாசலப் பிரதேசத்தின் தவாங்கிற்கு வடமேற்கே சுமார் 344 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இதற்கிடையில், 5வது தலைமுறை போர் விமானங்கள் தற்போது இந்திய விமானப்படையில் செயல்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.