அமெரிக்காவில் காதலியை கொன்ற இந்திய மாணவன் ஜெர்மனியில் கைது
அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள அரிசோனா பல்கலைக்கழகத்தில் இந்தியாவைச் சேர்ந்த வருண் பட்சிகரி (20) பட்டப்படிப்பு படித்து வந்தார். அவருக்கு ஜுலிசா ருபி சலசிர் (19) என்ற காதலி இருந்தார்.கடந்த சில நாட்களாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 6-ம் தேதி டியுசன் நகரில் ஜுலிசா தங்கியிருந்த வீட்டுக்கு வருண் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜுலிசாவின் கழுத்தை நெரித்து வருண் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து டியுசன் விமான நிலையத்துக்கு சென்ற அவர், ஜெர்மனிக்கு புறப்பட்டுச் சென்றார்.
அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பிச் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது.இதற்கிடையில், ஜுலிசா கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், வருண் ஜெர்மனி வழியாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சிப்பதை கண்டறிந்தனர்.இதனைத் தொடர்ந்து ஜெர்மனி அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு செல்லும் நோக்கில் ஜெர்மனி விமான நிலையத்தில் இருந்த வருணை அந்நாட்டு போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட வருணை ஜெர்மனியில் இருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வர அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.