“6 சிலிண்டர் வாக்குறுதி... 3 ஆக குறைப்பா?” - தவெக அரசை விமர்சித்த டிடிவி தினகரன்
அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இதற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த அன்னப்பூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் குடும்பம் ஒன்றுக்கு ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.தற்போது முதல்-அமைச்சர் 3 சிலிண்டர்களை மட்டுமே அறிவித்துள்ள நிலையில், மீதமுள்ள 3 சிலிண்டர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும், தேர்தலுக்கு முன்பு 6 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அதை முதற்கட்டம் என்ற பெயரில் 3 சிலிண்டர்களாக குறைத்திருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.அதேபோல், பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், விவசாயிகளின் போராட்டங்களின் தீவிரத்துக்கு ஏற்ப தள்ளுபடி தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.தற்போது 6 சிலிண்டர்களுக்கு பதிலாக 3 சிலிண்டர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டதுடன், ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் பொருந்தும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 3 சிலிண்டர்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல்வேறு வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை முழுமையாக செயல்படுத்தாமல் பாதியளவில் நிறைவேற்றுவது ஏமாற்றம் அளிப்பதாகவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.எனவே, தவெக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என முதல்-அமைச்சர் விஜயை அவர் வலியுறுத்தியுள்ளார்.