58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட்: 4 தங்கப் பதக்கங்களுடன் இந்தியா ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடம்
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் நடைபெற்ற 58வது சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட் (International Chemistry Olympiad) போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்திய நான்கு மாணவர்களும் தலா ஒரு தங்கப் பதக்கத்தை வென்று சிறப்பான சாதனை படைத்துள்ளனர். இந்த வெற்றியின் மூலம், சீனா, வியட்நாம் மற்றும் ரஷ்யாவின் தனிநபர் பங்கேற்பாளருடன் இணைந்து இந்தியா ஒட்டுமொத்த தரவரிசையில் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளது.
ஜூலை 10 முதல் 19 வரை நடைபெற்ற இந்த சர்வதேச வேதியியல் ஒலிம்பியாட், 1968 முதல் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான இந்த உலகளாவிய போட்டி, அவர்களின் கோட்பாட்டு அறிவு மற்றும் செய்முறைத் திறன்களை மதிப்பிடும் முக்கியமான அறிவியல் மேடையாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான போட்டியில் 93 நாடுகளைச் சேர்ந்த 363 மாணவர்கள் பங்கேற்றனர். இந்திய அணியில் இடம்பெற்ற ஒடிஷாவின் தேபதத்தா பிரியதர்ஷி, பஞ்சாபின் ஹர்ஷித் சிங்கால், டெல்லியின் கபீர் சில்லார் மற்றும் தெலுங்கானாவின் சந்தீப் குச்சி ஆகிய நான்கு மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இந்திய அணிக்கு கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் சுபஜித் பந்த்யோபாத்யாயா மற்றும் ஹோமி பாபா அறிவியல் கல்வி மையத்தின் டாக்டர் இந்திராணி தாஸ் சென் ஆகியோர் வழிகாட்டியாக இருந்தனர். மேலும், ஐஐடி கரக்பூரின் டாக்டர் அனுபெந்து அதிகாரி மற்றும் மும்பை என்.இ.எஸ். ரத்னம் கல்லூரியின் டாக்டர் ஜெயஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அறிவியல் பார்வையாளர்களாக பங்கேற்று மாணவர்களுக்கு ஆதரவளித்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற வேதியியல் ஒலிம்பியாடில் இந்தியா இரண்டு தங்கம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றிருந்தது. இந்த ஆண்டு நான்கு தங்கப் பதக்கங்களை கைப்பற்றி இந்திய அணி புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவில், இந்திய இளைஞர்களின் திறமை உலக அரங்கில் தொடர்ந்து மிளிர்ந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தேபதத்தா பிரியதர்ஷி, ஹர்ஷித் சிங்கால், கபீர் சில்லார் மற்றும் சந்தீப் குச்சி ஆகியோரின் சாதனை நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், அவர்களின் அறிவுத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் அறிவியலின் மீதான ஈடுபாடு பல இளம் தலைமுறையினருக்கு ஊக்கமாக அமையும் என்றும் அவர் பாராட்டியுள்ளார்.
இதற்கிடையில், லிதுவேனியாவின் வில்நியுஸ் நகரில் நடைபெற்ற 37வது சர்வதேச உயிரியியல் ஒலிம்பியாட் போட்டியிலும் இந்திய மாணவர்கள் பதக்கங்கள் வென்றுள்ளனர். ஹரியானாவைச் சேர்ந்த பவ்யா குன்வால் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், மேற்கு வங்கத்தின் சவுமில் மைதி, ராஜஸ்தானின் நிஷித் கலாணி மற்றும் பஞ்சாபின் அன்மோல் குமார் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
ஜூலை 12 முதல் இன்று வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் 78 நாடுகளைச் சேர்ந்த 307 மாணவர்கள் பங்கேற்றனர். இந்தியா இந்த ஒலிம்பியாட் தொடரில் 26வது முறையாக கலந்து கொண்டது.
உயிரியியல் ஒலிம்பியாட் வெற்றியாளர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பவ்யா குன்வால், சவுமில் மைதி, நிஷித் கலாணி மற்றும் அன்மோல் குமார் ஆகியோரின் சாதனை இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளதாகவும், மூலக்கூறு உயிரியியல், உயிர்வேதியியல் மற்றும் விலங்கியல் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் வெளிப்படுத்திய அறிவுத்திறன் பாராட்டுக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வெற்றி எதிர்காலத்தில் அவர்கள் மேலும் உயரங்களை அடைய ஊக்கமளிக்கும் என்ற நம்பிக்கையையும் பிரதமர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.