மெட்டா நிறுவனத்துக்கு ரூ.5,400 கோடி இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு
இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் தளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு, இந்திய மதிப்பில் சுமார் ரூ.5,408 கோடி (567 மில்லியன் அமெரிக்க டாலர்) இழப்பீடு வழங்குமாறு அமெரிக்காவின் நியூ மெக்சிகோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.குழந்தைகளின் மனநலத்திற்கு சமூக வலைதளங்கள் ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் சம்பவங்கள் தொடர்பான தகவல்களை மறைத்ததாகக் கூறி, மெட்டா நிறுவனத்திற்கு எதிராக நியூ மெக்சிகோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிவில், கடந்த மார்ச் மாதம் மெட்டாவுக்கு 375 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3,574 கோடி) அபராதம் விதிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, தற்போது வெளியிடப்பட்ட இரண்டாம் கட்ட தீர்ப்பில், குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடாக 567 மில்லியன் அமெரிக்க டாலரை மெட்டா நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்த தொகையில் 420 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.4 ஆயிரம் கோடி) பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சை சேவைகளுக்காக ஒதுக்கப்படும் என நீதிபதி பிரையன் பீட்ஷைட் தெரிவித்தார்.மீதமுள்ள நிதி, விழிப்புணர்வு நடவடிக்கைகள், தடுப்பு திட்டங்கள், பரிசோதனை சேவைகள் மற்றும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஏற்படும் பிற செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.இதற்கிடையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.