மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் யார்..யார்..?
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. த.வெ.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தரப்பில் மதுராந்தகத்தில் கணிதா சம்பத்தும், தாராபுரத்தில் பானுமதியும் களமிறக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வக்கீல் பரந்தாமனும், தாராபுரம் தனித் தொகுதியில் வக்கீல் சுகன்யாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்த நாம் தமிழர் கட்சி, தனது வேட்பாளர்களின் பெயர்களை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் கார்த்திகா ஆகியோர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். அதேபோல், புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் கார்த்திக் குமாரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்காக கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளும், பல்வேறு பாசறைகளைச் சேர்ந்த பொறுப்பாளர்களும், கட்சி உறவுகளும் ஒருங்கிணைந்து முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.