தமிழ்நாடு முழுவதும் 46 துணை போலீஸ் சூப்பிரண்டுகளை பணியிட மாற்றம் செய்து டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இந்த மாற்றல் பட்டியலில் சென்னை, தாம்பரம் மற்றும் ஆவடி கமிஷனரகங்களில் பணியாற்றி வந்த உதவி கமிஷனர்களும் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, சென்னை வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர் மகேந்திரன் கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆவடி கமிஷனரக குற்ற ஆவணக் காப்பகத்தில் உதவி கமிஷனராக இருந்த முத்துராஜா, லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி கமிஷனரக உளவுப்பிரிவு உதவி கமிஷனராக பணியாற்றிய மணிவண்ணன், காஞ்சீபுரம் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், ஆவடி கமிஷனரக பொன்னேரி உதவி கமிஷனர் பொறுப்பை தமிழ்வாணன் ஏற்கிறார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த முகமது நாசர், சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Advertisement
மேலும், டி.ஜி.பி. அலுவலக தேர்தல் பிரிவு டி.எஸ்.பி. பொறுப்பையும் அவர் கவனிப்பார். சென்னை ஐகோர்ட்டு உதவி கமிஷனராக பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனரகத்தில் மக்கள் தொடர்பு உதவி கமிஷனராக மகேஷ் பொறுப்பேற்கிறார். ஆவடி கமிஷனரக நலப்பிரிவு உதவி கமிஷனராக சஞ்சீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி உதவி போலீஸ் கமிஷனராக சம்பத் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை அயனாவரம் உதவி கமிஷனராக இருந்த வேலு, கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு டி.எஸ்.பி.யாக ராஜலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். தாம்பரம் கமிஷனரக நலப்பிரிவு உதவி கமிஷனராக ஹரிசங்கரி பொறுப்பேற்க உள்ளார்.