சதுர்த்தி விழா: மதுரை மாவட்டத்தில் 750 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் மொத்தம் 750 இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மாநகரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பா.ஜனதா, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். பின்னர் இந்த சிலைகள் கீழமாசிவீதி, விளக்குத்தூண், மொட்டை விநாயகர் கோவில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து சிலைகள் ஊர்வலமாக மாசி வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு, சிம்மக்கல் வழியாக வைகை ஆற்றில் கரைக்கப்படும். இதேபோல், மதுரை புறநகர் பகுதிகளிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பின்னர் அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் சிலைகள் வைப்பதற்காக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கோரி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலித்த மாநகர காவல்துறை, 350 இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவ அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அந்த இடங்களில் சிலைகள் வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி மதுரை மாநகரம் முழுவதும் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.