பெட்ரோல், டீசல் விலை உயர்வு; பாகிஸ்தானில் போராட்டம்
பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையிலான போரின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளில் எதிரொலித்து வருகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானிலும் இதன் தாக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.அந்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 328 பாகிஸ்தான் ரூபாய்க்கும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.113-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு லிட்டர் டீசல் 380 பாகிஸ்தான் ரூபாயாகவும், இந்திய மதிப்பில் சுமார் ரூ.130 ஆகவும் உள்ளது.இதற்கிடையே, பெட்ரோல் மற்றும் டீசலுக்கு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் எரிபொருள் விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஏற்பாட்டில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்தப் போராட்டத்தால் பாகிஸ்தானில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.