தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தவெக அரசு: மு.வீரபாண்டியன் வரவேற்பு
சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விமானம் மற்றும் சரக்கு போக்குவரத்து உள்ளிட்டவற்றின் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சென்னையில் கூடுதலாக ஒரு விமான நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் பரந்தூர் பகுதியில் விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.ஆனால், இந்தத் திட்டத்திற்கு எதிராக அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். விமான நிலையம் அமைக்கப்பட்டால் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டு, புதிய விமான நிலையத்திற்கான இடம் விரைவில் தேர்வு செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் முதல்-அமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த முடிவை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.புதிய விமான நிலையம் அமைக்கும்போது விவசாய நிலங்கள், குடியிருப்புகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு அதிகபட்ச பாதிப்பு ஏற்படாத வகையில் பொருத்தமான இடத்தை தமிழ்நாடு அரசு விரைவாக தேர்வு செய்ய வேண்டும். மேலும், விமான நிலையம் அமைக்கும் பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும்.ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என தவெக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அதன் தொடர்ச்சியாக, முதற்கட்டமாக ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சம் வரை உள்ள குடும்பங்களுக்கு வரும் பொங்கல் முதல் 3 சிலிண்டர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும் கட்சி வரவேற்கிறது.அதேவேளை, தேர்தல் வாக்குறுதியின்படி ஆண்டுக்கு 6 சிலிண்டர்களை வழங்க வேண்டும். மேலும், ரூ.5 லட்சம் வரை ஆண்டு குடும்ப வருமானம் கொண்ட குடும்பங்களும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டம் அக்டோபர் 2 முதல் விரிவுபடுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.முதல் கட்டமாக மாநகரங்கள் மற்றும் நகரங்களில் சாதாரண பேருந்துகளுடன் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ் மற்றும் டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். மாவட்டங்களுக்கு இடையிலான பயணங்களுக்கும், புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற வருமான வரம்போ, பயண எண்ணிக்கைக்கான கட்டுப்பாடோ இருக்காது என்றும், ‘வெற்றிப் பயணத் திட்டம்’ மற்ற சேவைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.இந்த அறிவிப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதாக மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.