தென் கொரியாவில் வரலாறு காணாத வெப்பம்: 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 42.5 டிகிரி செல்சியஸ் பதிவு
தென் கொரியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் வெப்பம் நிலவி வருகிறது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சமாக, அந்நாட்டில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக அனல் காற்றின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தென்கிழக்கு பகுதியில் உள்ள யாங்சான் நகரில் இந்த அதிகபட்ச வெப்பநிலை பதிவானதாக தென் கொரிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.26 மணியளவில் 42.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது.1904-ம் ஆண்டு முதல் நவீன முறையில் வானிலை தரவுகள் சேகரிக்கத் தொடங்கப்பட்ட பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுவாகும். யாங்சான் நகரில் தொடர்ந்து 5-வது நாளாக வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது.வெப்பத்தின் தீவிரம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தென் கொரியாவின் 20-க்கும் மேற்பட்ட உள்ளூர் பகுதிகளில் அரசு அவசரகால அனல் காற்று எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதன்படி, வெப்பத்தின் தாக்கம் குறையும் வரை திறந்தவெளி பணிகள் மற்றும் விளையாட்டு போன்ற உடல் உழைப்பு சார்ந்த நடவடிக்கைகளை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், குளிர்சாதன வசதி உள்ள வீடுகள், வணிக வளாகங்கள் அல்லது அரசு ஏற்படுத்தியுள்ள குளிர்விப்பு மையங்களில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.கடுமையான வெப்பநிலை காரணமாக, ரசிகர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கொரியாவின் தொழில்முறை பேஸ்பால் லீக் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இந்த கடும் வெப்பநிலைக்கு பசிபிக் மற்றும் திபெத்திய உயர் அழுத்த மண்டலங்கள் கொரிய தீபகற்பத்தை சூழ்ந்து, வெப்பக் காற்று வெளியேறுவதை தடுத்து வருவதே முக்கிய காரணம் என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், மனித செயல்பாடுகளால் ஏற்படும் காலநிலை மாற்றம் மற்றும் எல் நினோ தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் இதுபோன்ற தீவிர வானிலை நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.