தூத்துக்குடி அருகே மேய்ச்சலுக்குச் சென்ற 37 ஆடுகள் ஒரே நேரத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேங்கி நின்ற மழைநீரில் ரசாயனக் கழிவுகள் கலந்திருந்ததாகவும், அந்த நீரை ஆடுகள் குடித்ததால் அவை உயிரிழந்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தூத்துக்குடி அருகே மீளவிட்டான் பகுதியைச் சேர்ந்தவர் சுடலை. கால்நடை விவசாயியான இவர் சுமார் 300 ஆடுகளை வளர்த்து வருகிறார். காலாங்கரை பகுதியில் உள்ள விளைநிலத்தில் உரத்திற்காக அமைக்கப்பட்டிருந்த ஆட்டுக்கிடையில் 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து பராமரித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வீராநாயக்கன்தட்டு பகுதியில் சுமார் 70 ஆடுகளை மேய்ச்சலுக்காக அழைத்துச் சென்றுள்ளார். மாலை நேரத்தில் ஆடுகளை காணாததால், அப்பகுதி மக்களின் உதவியுடன் தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது காட்டுப்பகுதியில் ஆங்காங்கே 37 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் சில ஆடுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன. இதற்கிடையே, வீராநாயக்கன்தட்டு பகுதியில் உள்ள குடோன் அருகே நேற்று அதிகாலை பெய்த மழையால் தண்ணீர் தேங்கியிருந்தது.
Advertisement
அந்த நீரில் ரசாயனக் கழிவுகள் கலந்திருந்ததாக கூறப்படும் நிலையில், மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் அந்த நீரைப் பருகியதாலேயே உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் 37 ஆடுகள் உயிரிழந்ததால் தனது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுடலை வேதனை தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி தாசில்தார் திருமணி ஸ்டாலின், கால்நடைத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுடன் சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். குடோன் அருகே தேங்கியிருந்த தண்ணீரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், உயிரிழந்த 37 ஆடுகளுக்கும் சம்பவ இடத்திலேயே உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கூட பரிசோதனை முடிவுகள் கிடைத்த பிறகே ஆடுகளின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெளிவாக தெரியவரும்.