‘வெற்றிப்பயணம்' பஸ்களில் ஆண்களுக்கும் கட்டணம் குறைப்பு
தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சில பஸ்களில் ஆண் பயணிகளுக்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆண் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த தி.மு.க. ஆட்சியில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தின்போது த.வெ.க. தலைவர் விஜய், புறநகர் பஸ்களிலும் பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். பின்னர் த.வெ.க. ஆட்சியை அமைத்து, விஜய் முதல்-அமைச்சரானார். இதையடுத்து காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கடந்த 2-ந்தேதி தமிழகத்தில் புறநகர் பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் கீழ் இயக்கப்படும் சில பஸ்களில் ஆண்களுக்கான டிக்கெட் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. நெல்லை-திருச்செந்தூர் வழித்தடத்தில் முன்பு ரூ.50 வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.38 ஆக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் இடைநில்லா எண்ட் டூ எண்ட் பஸ்களில் ரூ.50 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் பஸ்களில் ரூ.40-ம், சாதாரண பஸ்களில் ரூ.35-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. விழுப்புரம் கோட்டத்தின் வேலூர் மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ‘வெற்றிப்பயணம்’ திட்டத்துக்காக இயக்கப்பட்ட 128 பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் ‘வெற்றிப்பயணம்’ பஸ்களில் ஆண்களுக்கான கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.7 ஆக குறைந்துள்ளது. குமரி மாவட்டத்திலும் களியக்காவிளை, மார்த்தாண்டம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் பஸ்களின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 65 பஸ்களில் ஆண் பயணிகளுக்கான டிக்கெட் கட்டணம் குறைந்துள்ளது.
திருச்சி கோட்டத்தில் 43 எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண கட்டண பஸ்களாக மாற்றப்பட்டுள்ளன. திருச்சியில் இருந்து துறையூருக்கு எக்ஸ்பிரஸ் பஸ்சில் வழக்கமாக ரூ.40 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தின் கீழ் தற்போது ஆண்களிடம் ரூ.30 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து நெல்லை அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் இடைநில்லா பஸ்கள், எக்ஸ்பிரஸ் பஸ்கள், சாதாரண பஸ்கள், தாழ்தள சொகுசு பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் என பல்வேறு வகையான பஸ்கள் இயக்கப்படுகின்றன. ‘வெற்றிப்பயணம்’ திட்டத்தில் பெண்களுக்கு இலவச பயண வசதி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, சாதாரண பஸ்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் சாதாரண பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில், பல எக்ஸ்பிரஸ் பஸ்கள் சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டன. இதன்படி நெல்லை மாவட்டத்தில் சாதாரண பஸ்களின் எண்ணிக்கை 70-ல் இருந்து 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சாதாரண பஸ்களாக மாற்றப்பட்டதால், அவற்றுக்கான கட்டணமும் அதற்கேற்ப குறைந்துள்ளது. அதே நேரத்தில் இடைநில்லா மற்றும் எக்ஸ்பிரஸ் பஸ்களின் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.