தமிழ்நாட்டின் உணர்வுகளை மதித்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: மாணிக்கம் தாகூர்
நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த மாணவி ஸ்ருதிலயா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் மருத்துவக் கலந்தாய்வில் இடம் கிடைக்காத மனவேதனையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் கடுமையாக உழைத்த இளம் மாணவியை இழந்தது மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மாணவி ஸ்ருதிலயாவின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிப்பார்கள் என்றும் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில் லட்சக்கணக்கானோர் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வை எழுதுகின்றனர். ஆனால், மாநிலத்தில் உள்ள மொத்த மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 13,999 மட்டுமே என அவர் தெரிவித்துள்ளார்.2025-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 76,181 ஆக இருந்த நிலையில், 2026-ம் ஆண்டில் அது 61,306 ஆகக் குறைந்துள்ளதாகவும், இது 19.5 சதவீத வீழ்ச்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.