ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சிக்கிறதா? - டிடிவி தினகரன் கேள்வி
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக எதிர்காலத்தில் தடை கொண்டுவர தவெக அரசு முயற்சி செய்கிறதா? என்ற சந்தேகம் எழுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடைய வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிப்பதாக சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது.சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களின் வரிப்பணத்தில் கார் வழங்கும் முடிவை எடுத்த தவெக, தனது இரண்டு எம்.எல்.ஏ.க்கள் மூலமாகவே அந்த திட்டத்தை சட்டப்பேரவையில் முன்மொழிந்தது. அதேபோன்று, உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் அலங்காநல்லூரை உள்ளடக்கிய சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. மூலம், ஜல்லிக்கட்டு குறித்து சட்டப்பேரவையில் இத்தகைய கருத்து பதிவு செய்யப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.இதனால், எதிர்காலத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க தவெக அரசு முயற்சி செய்கிறதா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.அலங்காநல்லூரில் தொடங்கி சென்னை மெரினா வரை தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து நடத்திய போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பாரம்பரிய உரிமை மீட்டெடுக்கப்பட்டது.