நேபாள வெள்ளம்: பலி எண்ணிக்கை 600-ஐ நெருங்கியது; மாயமான 2,500 பேரை தேடும் பணி தீவிரம்
நேபாளத்தின் சீன எல்லையையொட்டிய பகுதியில் கடந்த 26-ந்தேதி காலை போடேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. பனிச்சரிவு காரணமாக லெண்டே ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு உருவான ஏரி உடைந்ததே இந்த திடீர் வெள்ளத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.வெள்ளநீருடன் பாறைகள், மண், சேறு ஆகியவையும் பெருக்கெடுத்து வந்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டது. கண் இமைக்கும் நேரத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நீர்மின் நிலையங்கள், பாலங்கள், சாலைகள், செல்போன் கோபுரங்கள், வீடுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை அடித்துச் சென்றது.சீன எல்லையை ஒட்டியுள்ள நேபாளத்தின் 8 மாவட்டங்கள் இந்த பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ரசுவா, நுவாகோட் மற்றும் தடிங் ஆகிய 3 மாவட்டங்கள் மிகக் கடுமையாக சேதமடைந்துள்ளன. இமயமலையில் இருந்து அடித்து வரப்பட்ட கற்கள், மண் மற்றும் சேறு பல அடி உயரத்துக்கு குவிந்துள்ளதால் அந்த பிராந்தியம் முழுவதும் பேரழிவின் சுவடுகளாக காட்சியளிக்கிறது.வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் பலர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.