நேபாள பெருவெள்ளம்.. மேலும் 49 தமிழர்கள் குறித்த தகவல் இல்லை
வடக்கு நேபாளத்தில் ஆற்றின் மேல்பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவைத் தொடர்ந்து, எல்லையோர நதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த பேரிடரில் இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். சாலைகள், மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்டவை கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க ராணுவம் மற்றும் தனியார் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெள்ளத்தில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்தவர்களை மீட்கும் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் அல்லது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது உறவினர்கள் உதவிக்காக தொடர்புகொள்ளும் வகையில் அவசர தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் நேபாளத்தில் உள்ள இந்திய தூதரகம் மூலம் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் நிலை குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், குரோம்பேட்டையைச் சேர்ந்த மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி மூலம் கடந்த 14-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 49 பேர் நேபாளத்துக்கு சென்றுள்ளனர். யாத்திரையை முடித்துவிட்டு நேற்று தாயகம் திரும்புவதற்காக குடியுரிமை அலுவலகத்துக்குச் சென்றதாக கூறப்படும் இவர்களைப் பற்றிய தகவல் தற்போது வரை கிடைக்கவில்லை.
இதனால், அவர்கள் வெள்ளத்தில் சிக்கியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்த குழுவில் தேனியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் இடம்பெற்றுள்ளனர். சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தீனதயால், ஈக்காட்டுத்தாங்கலைச் சேர்ந்த விக்ரமன் மற்றும் மஞ்சுளா, குரோம்பேட்டையைச் சேர்ந்த 6 பேர், காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர் உள்ளிட்ட 49 பேரின் நிலை குறித்து தகவல் இல்லை.மேலும், நாமக்கல்லைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 5 பேரும் இந்தப் பயணத்தில் சென்ற நிலையில், அவர்களையும் தொடர்புகொள்ள முடியவில்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து நேபாளம் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருப்பது அவர்களது குடும்பத்தினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.இதையடுத்து, மகாதேவ் கைலாஷ் ஏஜென்சி அலுவலகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நேபாளம் சென்றவர்களின் முழு விவரங்கள், அவர்களுடன் கடைசியாக எப்போது தொடர்பு கொள்ளப்பட்டது உள்ளிட்ட தகவல்களை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். காணாமல் போனவர்கள் குறித்து அரசு தரப்பிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்கிடையே, கும்பகோணத்தில் இருந்து நேபாளம் சென்ற 57 பேரில் 21 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.