கடையநல்லூர்: மூதாட்டியிடம் 44 கிராம் தங்க நகைகள் கொள்ளை – 2 பேர் கைது
தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூர் அருகே வீட்டில் தனியாக வசித்து வந்த 73 வயது மூதாட்டியிடம் கத்தியை காட்டி மிரட்டி 44 கிராம் தங்க நகைகளை பறித்துச் சென்ற சம்பவத்தில், பக்கத்து வீட்டுப் பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலக்கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்த கணபதி அம்மாள் (73), தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த 11-ந்தேதி இரவு அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் மர்ம நபர்கள் வீட்டின் மேற்கூரையை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.பின்னர் கணபதி அம்மாளை கட்டிப்போட்ட மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி அணிந்திருந்த நகைகளை கழற்றித் தருமாறு கூறியுள்ளனர். அச்சமடைந்த அவர் காதில் அணிந்திருந்த கம்மல் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 44 கிராம் தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் ஆய்வாளர் கிறிஸ்டி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.விசாரணையின்போது, அந்தப் பகுதியில் உள்ள தோப்பில் ஆரஞ்சு நிற மோட்டார் சைக்கிள் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது போலீசாரின் கவனத்துக்கு வந்தது. அதன் உரிமையாளர் அங்கு இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார், வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.இதில் அந்த மோட்டார் சைக்கிள் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கோகுல் கண்ணன் (36) என்பவருக்குச் சொந்தமானது என்பது தெரியவந்தது.