தந்தை பெரியாரின் 148வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை..!
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட உள்ளது. இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வரும் 17.9.2026 அன்று தந்தை பெரியாரின் 148-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியாரின் திருஉருவச் சிலை அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரது உருவப்படத்திற்கு அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.