கோவை நவஇந்தியா அருகே ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் அடுத்தடுத்து சுமார் 20 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் சேதமடைந்தன.சம்பவம் நடந்த நேரத்தில் அப்பகுதியில் வசித்து வந்த வடமாநில தொழிலாளர்கள் வேலைக்குச் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், வீடுகளில் இருந்த பொருட்கள் மற்றும் தொழிலாளர்களின் உடைமைகள் தீயில் சிக்கி சேதமடைந்தன.தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சிலிண்டர்களில் இருந்து எரிவாயு கசிந்து, ஒன்றன்பின் ஒன்றாக சிலிண்டர்கள் வெடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து வெடிப்பு சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.தகவல் அறிந்து 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
Advertisement
நீண்ட நேரம் போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், தீப்பற்றாமல் இருந்த சிலிண்டர்களையும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.இந்த தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட தகர வீடுகள் சேதமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில், தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.