எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிக்காதது ஏன்? – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் விளக்கம்
தமிழக சட்டமன்றம் 3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் பதிலளித்தார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்களின் கரவொலியுடன் தனது உரையைத் தொடங்கிய முதல்-அமைச்சர் விஜய், போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துதல், பெண்களின் பாதுகாப்பு, காவல் மரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். பெண்களுக்கு எதிரான அவதூறான கருத்துகளை அரசு அனுமதிக்காது என்றும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.தொடர்ந்து தி.மு.க.வை விமர்சித்த விஜய், தமிழக அரசியல் சூழலில் சமீபகாலமாக ஆபாசம் மற்றும் வன்முறை சார்ந்த பேச்சுகள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். குறிப்பிட்ட சில தி.மு.க. உறுப்பினர்களின் பேச்சுகளையும் சுட்டிக்காட்டி, மக்கள் அளித்த தீர்ப்பை எதிர்க்கட்சியினர் மதிக்க வேண்டும் என்று கூறினார்.மேலும், சர்க்காரியா கமிஷன் அறிக்கையை குறிப்பிட்ட விஜய், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் வீராணம் குழாய் திட்டத்துக்கான டெண்டர் தொடர்பாக லஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தார். முரசொலி கட்டிடம் தொடர்பாக அமலாக்கத்துறை கமிஷன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாகவும், சத்யநாராயணா பிரதர்ஸ்க்கு டெண்டர் வழங்குவதற்காக அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் கூறினார்.கட்சி நிதி விவகாரத்தையும் விஜய் தனது உரையில் குறிப்பிட்டார். தி.மு.க. 7.5 முதல் 10 சதவீதம் வரை கட்சி நிதி பெற்றதாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறித்தும் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார்.மேலும், ஊழல் குறித்துப் பேசும்போது தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவிப்பதாக விமர்சித்த விஜய், முந்தைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை நினைவில் கொண்டு சட்டம்-ஒழுங்கு குறித்து பேச வேண்டும் என்றும் கூறினார். சட்டமன்றத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளி முதல்-அமைச்சர் தனது பதிலுரையை வழங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கருத்துகளுக்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலர் எழுந்து நின்று முழக்கங்களை எழுப்பியதுடன், தங்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரினர். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.