சினிமா துறையில் விஜய் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது- நடிகர் சூரி பேட்டி
சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை சென்ற நடிகர் சூரி, அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சினிமா துறையில் நடிகர் விஜய் இல்லாதது வருத்தமளிப்பதாகவும், அவர் விட்டுச் சென்ற இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்றும் தெரிவித்தார்.தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கிய சூரி, தற்போது கதாநாயகனாகவும் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படத்தை எல்ரெட் குமார், தனது ஆர்.எஸ். இன்போ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.மீனவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கு நடிகர் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்சுத் குமார், சச்சனா நமிதாஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வருகிற 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ‘மண்டாடி’ படக்குழுவினர் பல்வேறு இடங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.