உலக பிசியோதெரபி தினம்: பிசியோதெரபி மருத்துவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து
உலக பிசியோதெரபி தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 8-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பிசியோதெரபி மருத்துவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலக பிசியோதெரபி தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8-ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக பிசியோதெரபி மருத்துவ அமைப்பு 1951-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. இதனை நினைவுகூரும் வகையில், 1996-ம் ஆண்டு முதல் இத்தினம் உலக பிசியோதெரபி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.2026-ம் ஆண்டுக்கான பிசியோதெரபி தினத்தின் கருப்பொருளாக, இருதய நோய் மற்றும் பக்கவாதத்தை தடுப்பது, சிகிச்சை அளிப்பது மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதில் பிசியோதெரபியின் பங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இருதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை தடுப்பதிலும், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளிலும் பிசியோதெரபி மற்றும் உடற்பயிற்சிகள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. இந்த அம்சத்தை மையமாக வைத்து இந்த ஆண்டு பிசியோதெரபி தினம் கடைபிடிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.பிசியோதெரபி துறையைச் சேர்ந்தவர்கள், அதன் மருத்துவப் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். உடல் இயக்கம், தசைகளின் வலிமையைப் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டுகளின் இயக்கம் மற்றும் அறிவியல் அடிப்படையிலான உடற்பயிற்சி உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் மக்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.தசைகள், எலும்புகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் வலிகளுக்கு சிகிச்சை அளித்தல், அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் இயக்கத்தை மீட்டெடுத்தல், பக்கவாதம் மற்றும் நரம்பு மண்டல பாதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்தல், விளையாட்டு வீரர்களின் காயங்களை சரிசெய்தல் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகளை பிசியோதெரபி மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.நவீன அறிவியல் மருத்துவத்துடன் இணைந்து செயல்படும் பிசியோதெரபி மருத்துவ சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் வகையில், தமிழ்நாட்டில் இதற்கான மருத்துவ வசதிகளை அரசு மேலும் விரிவுபடுத்த வேண்டும்.தமிழ்நாட்டில் பிசியோதெரபி மருத்துவம் படித்த 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர்.