11 மீனவர்களுடன் விபத்தில் சிக்கிய இந்திய மீனவ படகு - மீட்பு நடவடிக்கையில் இறங்கிய இலங்கை கடற்படை
இந்தியா–இலங்கை இடையிலான மீனவர் பிரச்சினை நீண்டகாலமாக இரு நாடுகளின் உறவில் முக்கிய விவகாரமாக இருந்து வருகிறது. இலங்கை கடல் எல்லையை அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டு எழும் சம்பவங்களில், இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் அடிக்கடி நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டையும் இலங்கையையும் பிரிக்கும் பாக் நீரிணை, இரு நாடுகளின் மீனவர்களும் அதிகளவில் மீன்பிடிக்கும் பகுதியாக உள்ளது. இந்த பகுதியில் மீன்பிடிக்கும் போது, தெரியாமலோ அல்லது எதிர்பாராத விதமாகவோ சர்வதேச கடல் எல்லையை மீறிச் செல்லும் சம்பவங்கள் நிகழ்வதால், கடற்படையினரின் நடவடிக்கைக்கு மீனவர்கள் ஆளாகின்றனர்.
இந்தச் சூழலில், 11 இந்திய மீனவர்களுடன் சென்ற மீன்பிடி படகு ஒன்று சர்வதேச கடல் எல்லையைக் கடந்து இலங்கை கடல் பகுதிக்குள் நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் படகு புதன்கிழமை பாக் நீரிணையில் உள்ள டெல்ப்ட் தீவு (நெடுந்தீவு) அருகேயுள்ள பவளப்பாறை பகுதியில் தரைதட்டி விபத்துக்குள்ளானதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் கமாண்டர் சமிந்த வாலகுலுகே கூறியதாவது: இலங்கை கடல் பகுதியில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் இந்திய மீன்பிடி படகு பவளப்பாறையில் மோதியதால் சேதமடைந்தது. படகில் 11 இந்திய மீனவர்கள் இருந்தனர். இந்த விபத்தில் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், படகில் இருந்த இந்திய மீனவர்களுக்கு உதவுவதற்காக மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டு மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இந்த சம்பவம் தொடர்பாக சட்ட நடைமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.