வகுப்பறை முதல் ஆய்வகம் வரை... அரசு பள்ளிகளின் தேவைகள் பட்டியல் வெளியானது!
பள்ளிக்கல்வித் துறைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பள்ளிகளில் நிலவும் உள்கட்டமைப்பு குறைபாடுகள் எப்போது முழுமையாக சரிசெய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தற்போது 5,641 வகுப்பறைகள் மற்றும் 5,880 கழிவறைகள் தேவைப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையான தரத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கைகளில் கடந்த அரசுகள் கவனம் செலுத்திய நிலையில், தற்போது பொறுப்பேற்றுள்ள அரசும் அதே நோக்கில் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை விவரங்களை கேட்டிருந்தது. அதன்படி, பள்ளிகளில் இருந்து தேவைகள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு, அவற்றை நிறைவேற்றுவதற்கான உத்தேச செலவு விவரங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2026-27ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளுக்கு 5,641 புதிய வகுப்பறைகள் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறைக்கு சுமார் ரூ.25.97 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதற்காக மொத்தம் சுமார் ரூ.1,465 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.கழிவறை வசதியை பொறுத்தவரை, மாணவர்களுக்காக 3,142 கழிவறைகளும், மாணவிகளுக்காக 2,738 கழிவறைகளும் என மொத்தம் 5,880 கழிவறைகள் தேவைப்படுகின்றன.