பிரதமர் நரேந்திர மோடியை அவரது பள்ளிக்கால நண்பர் நேரில் சந்தித்து தனது நிலம் தொடர்பான பிரச்சினையை முறையிட்ட நிலையில், அந்த நிலத்தின் மீதான உரிமையை பாஜக எம்.எல்.ஏ. திரும்ப ஒப்படைத்துள்ளார். குஜராத் மாநிலம் வாத்நகரில் உள்ள பி.என். உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் ஒன்றாகப் படித்தவர் அஸ்கர் அலி வோரா. தற்போது மராட்டிய மாநிலம் மும்பையின் மிரா ரோடு பகுதியில் வசித்து வரும் அவர், கடந்த 1989-ம் ஆண்டு பயந்தர் கிழக்கு நவகர் பகுதியில் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை வாங்கியுள்ளார். அஸ்கர் அலி அந்த நிலத்தை யாருக்கும் விற்பனை செய்யாத நிலையில், 2011-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம் ‘சுவயம் பில்டர்ஸ்’ நிறுவனமும், பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவுக்குச் சொந்தமான ‘செவன் லெவன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்’ நிறுவனமும் நிலத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. நிலத்தை மீட்க கடந்த 15 ஆண்டுகளாக அரசு அதிகாரிகளை அணுகியும் உரிய தீர்வு கிடைக்கவில்லை என அஸ்கர் அலி தெரிவித்துள்ளார். இதற்கிடையில், சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள பயந்தர் மாநகராட்சி நகரத் திட்டமிடல் துறை அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், கடந்த 8-ம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை அஸ்கர் அலி சந்தித்தார். அப்போது தனது நிலம் தொடர்பான பிரச்சினையை அவரிடம் எடுத்துரைத்ததுடன், தனது புகார் மீது நகராட்சி, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் முறையிட்டார்.
Advertisement
மேலும், போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது மற்றும் கட்டுமான நிறுவனங்கள், அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, மராட்டிய மாநில உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர். பாஜகவைச் சேர்ந்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னவிசின் முதன்மைச் செயலாளர் ஸ்ரீகர் பர்தேசி தலைமையில் மும்பை மந்திராலயத்தில் நேற்று முன்தினம் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அஸ்கர் அலி, எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தா, பயந்தர் மாநகராட்சி கமிஷனர் ராதா பினோத் சர்மா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், சர்ச்சைக்குரிய நிலத்தின் மீதான தனது உரிமையை கைவிடுவதாகவும், அந்த இடத்தில் கட்டுமானம் மேற்கொள்ள பெற்றிருந்த அனுமதியை திரும்ப ஒப்படைப்பதாகவும் நரேந்திர மேத்தா அதிகாரபூர்வ கடிதத்தை வழங்கினார். மேலும், அஸ்கர் அலிக்கு எதிராக போலீசில் அளித்திருந்த புகாரையும் திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் இரு தரப்பினருக்கும் இடையே சுமுகமான முடிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, 15 ஆண்டுகளாக நீடித்து வந்த நிலம் தொடர்பான பிரச்சினை முடிவுக்கு வந்தது.