நடப்பு நிதியாண்டில் 7 ராக்கெட்டுகள் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் அறிவிப்பு
ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய விக்ரம்-1 என்ற சிறிய செயற்கைக்கோள் ஏவுதிறன் கொண்ட ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்ட இந்த சாதனைக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த வெற்றியைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் நாராயணன், நடப்பு நிதியாண்டில் மொத்தம் 7 ராக்கெட்டுகளை ஏவுவதற்கான திட்டம் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அடுத்த இரண்டு மாதங்களுக்குள் அடுத்த ராக்கெட் ஏவப்படும் என்றும் அவர் கூறினார்.மேலும், ராக்கெட் ஏவுதல் பணிகளுடன் இணைந்து, இந்தியாவின் மனிதர் விண்வெளி பயணத் திட்டமா ககன்யான் திட்டத்திற்கான பல்வேறு நடவடிக்கைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.விக்ரம்-1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதல் இந்திய விண்வெளித் துறையில் முக்கியமான முன்னேற்றமாக அமைந்துள்ளதாக நாராயணன் பாராட்டினார்.
இந்த திட்டத்தில் பணியாற்றியவர்களின் சராசரி வயது 28 என்றும், இளைஞர்களின் திறமையை வெளிப்படுத்திய இந்த சாதனை, ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’என்ற நாட்டின் தொலைநோக்கு இலக்கை அடைவதற்கான நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.இந்த வெற்றியை காணும் போது, பள்ளியில் மாணவர்கள் சிறப்பாகப் படித்து உயர்ந்த மதிப்பெண்கள் பெறுவதைப் பார்க்கும் மகிழ்ச்சி போன்ற உணர்வு ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.2020ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விண்வெளித் துறை சீர்திருத்தங்களின் மூலம், ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் இந்திய விண்வெளித் துறையில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றதாக நாராயணன் நினைவுகூர்ந்தார். அதன் பலனாக, தற்போது நாட்டில் முதன்முறையாக ஒரு தனியார் ராக்கெட் மூலம் செயற்கைக்கோள் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும் என்றும், இது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதோடு, இளைஞர்களிடையே அறிவியல் ஆர்வத்தையும் மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.