நகர்ப்புற உள்ளாட்சி பணிகளுக்கும் விரைவில் டி.என்.பி.எஸ்.சி. மூலம் ஆட்கள் தேர்வு
தமிழக சட்டசபையில் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் பணிகள் தொடர்பான சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்தார். மசோதாவில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு நடைமுறையை ஒருங்கிணைக்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திறமையான, தொழில்முறை அடிப்படையிலான மற்றும் வெளிப்படையான ஆட்சேர்ப்பு முறையை உருவாக்குவதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், மாநிலத்தின் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பதவிகளுக்குதகுதியான நபர்களை தேர்வு செய்யும் பணியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திடம் (டி.என்.பி.எஸ்.சி.) கூடுதல் பொறுப்பாக வழங்க அரசு முடிவு செய்துள்ளது.இதற்காகவே, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் பணிகள் தொடர்பான சட்டத்தின் வரம்பை விரிவுபடுத்தும் வகையில் இந்த சட்டத் திருத்த மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.