தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் அக்டோபர் 6-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்டோபர் 9-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இடைத்தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனால் ஆளும் கட்சியான த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தி.மு.க. இடைத்தேர்தலில் போட்டியிடுமா அல்லது தேர்தலை புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், நேற்று அந்தக் கட்சி முதலில் தனது வேட்பாளர்களை அறிவித்தது. மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் தி.மு.க.
Advertisement
சார்பில் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகமும் தனது வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமாரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்தியபாமாவும் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும் ஏற்கனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள். பின்னர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே, அ.தி.மு.க. சார்பில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ. கணிகா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமி வின்சென்டின் மகள் வக்கீல் உமா சங்கரியும் வேட்பாளர்களாக களமிறக்கப்படலாம் என கூறப்படுகிறது.