# “நீங்கள் கை வைத்து தாடையை காண்பித்தது சரிதான்” — விஜய்க்கு மு.க.ஸ்டாலின் பதிலடி
தமிழக சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆவேசமாக உரையாற்றிய அவர், திமுக குறித்து பேசும்போது, “நாங்கள் மிசாவை பார்த்தவர்கள்” என்று தொடர்ந்து கூறப்படுவதாக குறிப்பிட்டு, அதுதொடர்பாக ஒரு செய்கையையும் செய்து காட்டினார். விஜய்யின் இந்த உடல்மொழி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கேலி செய்யும் வகையில் இருந்ததாக அக்கட்சியின் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் அனுபவித்த சிறைத் துன்பங்களை முதலமைச்சர் தனது செய்கை மற்றும் உடல்மொழி மூலம் கொச்சைப்படுத்தியதாக அவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இதையடுத்து விஜய் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் கடந்த 7-ம் தேதி காவல்துறை மானியக் கோரிக்கை மீதான பதிலுரையின்போது தனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதே தவிர, அதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று தெரிவித்தார். எனவே, அந்த செய்கையை தனிப்பட்ட முறையில் யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், மிசா காலத்தில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை விளக்கி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “என் அன்பான தமிழ் மக்களுக்கு வணக்கம். அண்மையில் முடிவடைந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நடைபெற்ற சில சர்ச்சைகள், தமிழ் மக்களுக்கும் நமது உடன்பிறப்புகளுக்கும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப்பதை உணர்கிறேன். குறிப்பாக, இந்த விவகாரத்தில் எனது சிறை வரலாறும் இடம்பெற்றுள்ளதால், அது குறித்து சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தம்பி விஜய், நீங்கள் சொன்னது உண்மைதான். அது பொய் அல்ல. அவசரநிலை காலத்தில் அதற்கு எதிராக கலைஞர் மெரினா கடற்கரையில் மிகப்பெரிய பொதுக்கூட்டத்தை நடத்தி, மிசா சட்டத்தை கடுமையாக விமர்சித்தார். அதன் பின்னர், 30.01.1976 அன்று அப்போதைய ஒன்றிய அரசு திமுக ஆட்சியைக் கலைத்தது. ஆட்சி கலைக்கப்பட்ட உடனேயே, மிசா சட்டத்தின் கீழ் என்னை கைது செய்வதற்காக போலீசார் கோபாலபுரம் வீட்டுக்கு வந்தனர். அப்போது நான் வீட்டில் இல்லை. ‘பையன் பிரசாரத்துக்குப் போயிருக்கான். நாளைக்கு வந்துவிடுவான். வந்ததும் நானே போன் செய்கிறேன். வந்து கைது செய்துகொள்ளுங்கள்’ என்று கூறினார். மறுநாள் போலீசாரிடம் என்னை கைது செய்யும்படி தெரிவித்தார். சிறையில் எனக்கு பல்வேறு கொடுமைகள் நடந்தன. என்னை அடைத்த இடம் தொழுநோயாளிகள் இருந்த பகுதி. ஒரு சிறிய அறையில் 10 பேரை அடைத்து வைத்திருந்தார்கள். அந்த அறையில் இருந்த ஒரே ஒரு பானையைத்தான் அனைவரும் சிறுநீர் கழிக்க பயன்படுத்த வேண்டியிருந்தது. துர்நாற்றம் மிகுந்த அந்த இடத்தில்தான் நாங்கள் தூங்க வேண்டும். இரவு நேரங்களில் தூங்க விடாமல் போலீசார் லத்தியால் தாக்குவார்கள்; பூட்ஸ் காலால் மிதிப்பார்கள். மற்றொரு புறம் ஆயுள் தண்டனை கைதி ஒருவரை வைத்து கொடூரமாக தாக்கினார்கள். அந்த தாக்குதலில் எனது அண்ணனும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்டி பாபு சிறையிலேயே உயிரிழந்தார். அவர்கள் தாக்கியதில் எனது தாடை எலும்பு உடைந்தது. நீங்கள் கூட இப்படிக் கை வைத்து தாடையை காண்பித்தீர்கள் அல்லவா? அது சரிதான்.
Advertisement
நான் அடிபட்டதற்கான தழும்புகள் இன்றும் என்னிடம் இருக்கின்றன. நான் அதை மறுக்கவில்லை. யார் என்னை கொச்சைப்படுத்த முயன்றாலும், வரலாற்றை மாற்ற முடியாது. அது காலம் கடந்தும் அப்படியே இருக்கும். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்காகப் போராடிய பலருக்கும் இதுபோன்ற அடக்குமுறைகள் நடந்துள்ளன. போராளிகள் அனைவரும் இதுபோன்ற தடைகளை கடந்து வந்தவர்கள்தான். நான் வீட்டில் உங்களைச் சந்தித்தபோது கூறியதை மறந்துவிட்டீர்களா தம்பி விஜய்? தேர்தல் பிரசாரத்தின்போது உங்களை கடுமையாக விமர்சித்து பேசியதாகவும், அதற்காக ‘I am sorry சார்’ என்று நீங்கள் கூறியதாகவும் சொன்னேன். அதை நான் மனதில் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் யாரைப் பற்றி பேசினாலும் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்று உங்களிடம் கூறினேன். அதையும் மறந்துவிட்டீர்கள் போல தெரிகிறது. முதலமைச்சருக்குரிய கண்ணியத்துடன் உங்கள் வார்த்தைகளும் உடல்மொழியும் இருக்க வேண்டும். நாம்தான் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அதை மறக்காமல் பொறுப்புடன் செயல்படுங்கள். ‘உண்மை ஊரைச் சுற்றுவதற்குள் பொய் உலகையே சுற்றிவிடும்’ என்ற பழமொழியைப் போலத்தான் நிலைமை உள்ளது. அரசியல் காரணங்களுக்காக கலைஞர் மீது காழ்ப்புணர்ச்சியுடன் சிலர் கூறிய பொய்யான குற்றச்சாட்டுகளையே தம்பி விஜய்யும் கூறியிருக்கிறார். முதலமைச்சருக்கு சந்தேகம் இருந்தால், சட்டப்பேரவை நூலகத்துக்குச் சென்று இதுகுறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். அமலாக்கத்துறை எழுதிய கடிதத்தை வைத்துக்கொண்டு எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதாகக் கூறுகிறீர்கள். அமலாக்கத்துறை குற்றம்சாட்டிய வழக்குகளில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் பழிவாங்கலுக்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். உங்கள் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறை பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. ஒன்றிய அரசை கொள்கை எதிரியாக சித்தரிக்கும் உங்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது? தவெக ஆட்சியில் கொலை, பாலியல் குற்றங்கள் என சட்டம்-ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக உள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. ஆனால் முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையை ரீல்ஸ் மன்றமாக மாற்றிவிட்டார். தமிழ்நாட்டின் முன்னேற்றம் குறித்து சட்டப்பேரவையில் விவாதியுங்கள் விஜய். தேவையற்ற சர்ச்சைகளை சட்டமன்றத்தில் பேச வேண்டாம் என்பதுதான் எனது கோரிக்கை. பரந்தூர் திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் தமிழக வளர்ச்சியை 15 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார் விஜய். மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள், இது அவர்கள் எதிர்பார்த்த சரியான மாற்றம்தானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். விவசாயிகளுக்கான பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படவில்லை. ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது தகுதியுள்ளவர்களுக்கு 3 சிலிண்டர்கள் என்று மாற்றியிருக்கிறார். ரூ.2,500 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று விஜய் கூறியிருந்தார். ஆனால், இன்னும் நாங்கள் வழங்கிய அதே ரூ.1,000 மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் பல வாக்குறுதிகள் குறித்து விஜய் இதுவரை பேசவே இல்லை” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.