தே.மு.தி.க.வை பார்த்து திருமாவளவன் பயப்படுகிறாரா? பிரேமலதா ஆவேசம்
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றும் என்றும் கூறினார். மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகவும், தே.மு.தி.க.வின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டதாக பிரேமலதா தெரிவித்தார். அதற்கு, தே.மு.தி.க. தி.மு.க. கூட்டணியிலேயே தொடரும் என்றும், தங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தான் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்றிருந்த தங்களுக்கு குறைவான தொகுதிகளும், புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகளும் ஒதுக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு பதிலளிப்பதாக பிரேமலதா அப்போது கூறியிருந்தார். இந்நிலையில், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பிரேமலதா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.