சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் 22-வது ஆண்டு தொடக்க விழா கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து, விஜயகாந்த் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, இடைத்தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறும் என நம்பிக்கை தெரிவித்தார். இதற்காக கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து பணியாற்றும் என்றும் கூறினார். மேலும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்க உள்ளதாகவும், தே.மு.தி.க.வின் ஆதரவு தேவை என்றும் கேட்டுக்கொண்டதாக பிரேமலதா தெரிவித்தார். அதற்கு, தே.மு.தி.க. தி.மு.க. கூட்டணியிலேயே தொடரும் என்றும், தங்களது முழு ஒத்துழைப்பு இருக்கும் என்றும் தான் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். இதற்கிடையே, தி.மு.க. கூட்டணியில் நீண்ட காலமாக இடம்பெற்றிருந்த தங்களுக்கு குறைவான தொகுதிகளும், புதிதாக வந்த தே.மு.தி.க.வுக்கு அதிக தொகுதிகளும் ஒதுக்கப்பட்டதாக திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு பதிலளிப்பதாக பிரேமலதா அப்போது கூறியிருந்தார். இந்நிலையில், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பிரேமலதா தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் அவைத்தலைவர் இளங்கோவன், பொருளாளர் எல்.கே.சுதீஷ், தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை சரிசெய்ய வேண்டும், விஜயகாந்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, மக்கள் நலக் கூட்டணியில் இருந்தபோது விஜயகாந்தை முதல்-அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொண்ட திருமாவளவன், தற்போது தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதால்தான் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். தி.மு.க. கூட்டணியில் இருந்த காலத்தில் தமக்காக திருமாவளவனும், கனிமொழியும் மட்டுமே பிரசாரம் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது அமைச்சர் பதவி கிடைத்ததால் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை மாற்றி வேறு கூட்டணிக்கு சென்றுவிட்டதாகவும் பிரேமலதா குற்றம்சாட்டினார். மேலும், கம்யூனிஸ்டுகள் வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதைப் போல திருமாவளவனும் வெளியில் இருந்து ஆதரவு அளித்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டு, மற்றவர்கள் மீது குற்றம்சாட்டுவது சரியல்ல என்றும் கூறினார். பல கட்சிகள் இருக்கும் நிலையில், தே.மு.தி.க. மீது மட்டும் ஏன் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி காட்டப்படுகிறது என்றும் பிரேமலதா கேள்வி எழுப்பினார். “தே.மு.தி.க.வை கண்டு என்ன பயம்?” என்று கேள்வி எழுப்பிய அவர், தங்களால்தான் கூட்டணியை விட்டு வெளியேறியதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது என்பது மக்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்தார்.