திமுக செய்த ஊழல்கள் இதுதான்.! ஆதாரத்துடன் ஆவேசமாக பேசிய முதல்-அமைச்சர் விஜய்
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, முதல்-அமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் பதிலளித்து பேசினார்.அப்போது பேசிய அவர், தமிழக அரசியலில் சமீபகாலமாக ஆபாசம் மற்றும் வன்மம் நிறைந்த பேச்சுகள் அதிகரித்து வருவதாக விமர்சித்தார். அரசியல் கருத்துகளை தெரிவிப்பதற்கு உரிமை இருந்தாலும், பெண்களுக்கு எதிரான அவதூறு மற்றும் ஆபாசமான பேச்சுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினால் சட்டம் தனது கடமையைச் செய்யும் என்றும் தெரிவித்தார்.சட்டசபையில் உள்ள ஒரு உறுப்பினர், "எலும்பை உடைப்பேன்" என்று பேசியதாக குறிப்பிட்ட விஜய், அவர் எலும்பு மருத்துவரா என்றும் கேள்வி எழுப்பினார். அதேபோல், திமுகவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு நல்ல சாவு வராது என்று ஒருவர் பேசியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இத்தகைய பேச்சுகளால்தான் அவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பதாகவும், மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்க வேண்டும் என்றும் கூறினார்.தொடர்ந்து, தனது மேஜையில் இருப்பதாகக் கூறிய 3 கோப்புகள் குறித்து விஜய் பேசினார். அவற்றில் ஒன்றை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்ட அவர், கடந்த ஆட்சிக் காலத்தில் அமலாக்கத்துறை தெரிவித்த தகவல்களைப் படிப்பதாக கூறினார். விசாரணைக் கமிஷன் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், அவற்றை மக்களிடம் தெரிவிக்க வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.அறிக்கையை முழுமையாக படிக்க இரண்டு நாட்கள் ஆகும் என்பதால், அதன் முக்கிய அம்சங்களை மட்டும் சுருக்கமாக தெரிவிப்பதாக விஜய் கூறினார்.1977-ம் ஆண்டு சர்க்காரியா கமிஷன் தொடர்பான விவரங்களை சுட்டிக்காட்டிய அவர், திமுக ஆட்சியில் வீராணம் குழாய் திட்டத்துக்கான ஒப்பந்தத்தைப் பெற இரண்டரை சதவீத கமிஷன் கேட்கப்பட்டதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 1970 முதல் 1974 வரையிலான காலகட்டத்தில் ரூ.25 லட்சம் வரை லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.மேலும், முரசொலி கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களிலும் கமிஷன் பெறப்பட்டதாக கூறப்பட்டுள்ளதாக விஜய் தெரிவித்தார். சத்யநாராயணா பிரதர்ஸுக்கு டெண்டர் வழங்குவதற்காக கருணாநிதி தனது முதல்-அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.இந்த விவகாரங்களுக்கு ஆதாரம் கேட்டால், சட்டசபை நூலகத்திலேயே அதற்கான ஆவணங்கள் இருப்பதாக விஜய் கூறினார். ஆதாரங்களை அருகிலேயே வைத்துக்கொண்டு வேறு இடங்களில் தேடுவதாக அவர் விமர்சித்தார்.தொடர்ந்து கட்சி நிதி தொடர்பான அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுகளையும் அவர் முன்வைத்தார். 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரையிலான தொகை கட்சி நிதியாக பெறப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் விஜய் கூறினார்.டாஸ்மாக் துறையை கவனித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.