த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது – கனிமொழி
தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக வெற்றிக் கழக அரசு நடத்தும் அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய ஜல் சக்தி அமைச்சரை நேரில் சந்தித்து வழங்க தமிழக அரசு பிரதிநிதிகளை அனுப்பத் தயாராக உள்ளதா என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து முதலில் எச்சரித்தவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனக் குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி, மாநிலத்தின் கோரிக்கைகளைத் தீர்மானங்களாக நிறைவேற்றியதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, பல்வேறு மாநில முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை சென்னைக்கு அழைத்து, நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்தின் மூலம் மாநிலம் முழுவதையும் ஒருங்கிணைத்ததாகவும் கனிமொழி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பா.ஜ.க. இது தொடர்பான சட்டமுன்வரைவை கொண்டு வந்தபோதும், சட்டமன்றத் தேர்தல் பிரசாரப் பணிகளுக்கு இடையே அதற்கு எதிராக தி.மு.க. போராடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கருஞ்சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றி, சட்டவரைவு நகலை எரித்து எதிர்ப்பு தெரிவித்ததுடன், நாடாளுமன்றத்தில் அந்த மசோதா நிறைவேறாமல் தடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற இருப்பதாக இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட சட்டமுன்வடிவு குறித்த தகவலும் இதுவரை கிடைக்காத நிலையில், புதிதாக விவாதிக்க வேண்டிய விஷயம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.ஏற்கனவே நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்தின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, 1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்ற 2000-ம் ஆண்டு மத்திய அரசின் உறுதியைத் தொடர வேண்டும் என்றும், 2026-ம் ஆண்டுக்குப் பிறகும் மேலும் 30 ஆண்டுகளுக்கு அதே நடைமுறை நீடிக்கும் என மத்திய அரசு உறுதி அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதற்குத் தேவையான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தையும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போது இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே உள்ள தொகுதி விகிதம் எந்த அளவில் உள்ளதோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.