தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று (ஆகஸ்ட் 24), நாளை (ஆகஸ்ட் 25) ஆகிய இரு நாட்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ் வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.ஆகஸ்ட் 24: கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளைச் சேர்ந்த பிற மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.ஆகஸ்ட் 25: கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும்.மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களின் பிற பகுதிகள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மதுரை, சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யலாம்.
தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.ஆகஸ்ட் 26: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் பிற பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம்.ஆகஸ்ட் 24 முதல் 26-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை இயல்பான அளவிலேயே தொடரக்கூடும்.ஆகஸ்ட் 27 மற்றும் 28-ம் தேதிகளில் வட உள் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். மற்ற பகுதிகளில் வெப்பநிலை இயல்பான அளவில் இருக்கும்.சென்னை வானிலை: இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.