ஜி.வி.பிரகாஷின் ‘நிஞ்சா’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படமான **‘நிஞ்சா’** படத்தின் தொடக்க விழா மற்றும் சிறப்பு பூஜை இன்று காலை தஞ்சாவூரில் உள்ள ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் இன்று முதல் தொடங்கியுள்ளது.இசையமைப்பாளராக பல்வேறு மொழிகளில் முன்னணி திரைப்படங்களில் பணியாற்றி வரும் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிப்பிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த ‘ஹேப்பி ராஜ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும், வணிக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘யூத்’ படத்துக்கு அவர் இசையமைத்திருந்த நிலையில், அதன் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றன.இதற்கிடையே, ‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கும் புதிய படத்தில் ஜி.வி.பிரகாஷ் கிரிக்கெட் வீரர் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில், இயக்குநர் முருகு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்துக்கு ‘நிஞ்சா’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் பாரத் மற்றும் பிரார்த்தனா நாதன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரார்த்தனா நாதன் ‘பார்க்கிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.‘நிஞ்சா’ படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சினிஷ் மற்றும் லேஅர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.இந்தப் படத்தின் தொடக்க விழா வழக்கமான படப்பிடிப்பு தளம் அல்லது ஸ்டூடியோவில் இல்லாமல், தஞ்சாவூர் ஸ்ரீபதி சினிமாஸ் வளாகத்தில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. படக்குழுவினர் தியேட்டர் இருக்கைகளில் அமர்ந்தபடி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார், பிரார்த்தனா நாதன், ஷான் ரோல்டன், இயக்குநர் முருகு, தயாரிப்பாளர் சினிஷ் உள்ளிட்ட படக்குழுவினர் விழாவில் கலந்துகொண்டனர்.தொடக்க நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ‘நிஞ்சா’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று முதல் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.வித்தியாசமான முறையில் படப்பிடிப்பை தொடங்கியுள்ள ‘நிஞ்சா’ திரைப்படம் 2027-ம் ஆண்டு திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.