Skip to main content
தினத்துளிர்
TNTAM/26/A7738
🌤️ —°C
வியாழன் | 17 செப்டம்பர் 2026 | 1 புரட்டாசி பராபவ வருடம்

சிக்கல் தீர்க்கும் மதுரை திருவாப்புடையார் தரிசனம்

சிக்கல் தீர்க்கும் மதுரை திருவாப்புடையார் தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வடக்குப் பகுதியில், செல்லூர் அருகே வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோயில். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இத்தலம், பக்தர்களின் சிக்கல்களைத் தீர்க்கும் திருத்தலமாகப் போற்றப்படுகிறது. பாண்டிய மன்னர் ஒருவர் தீவிர சிவபக்தராக இருந்தார். தினமும் சிவபூஜை செய்த பின்னரே உணவு அருந்துவது அவரது வழக்கம். ஒருநாள் வேட்டைக்காக வனத்துக்குச் சென்றபோது, அவரது கண்களில் ஒரு மான் தென்பட்டது. அதை நோக்கி அம்பு எய்தியபோதும், மான் தப்பிச் சென்றது. அதைத் தொடர்ந்து மன்னரும் நீண்ட தூரம் ஓடினார். இறுதியில் களைப்பில் சோர்ந்துபோன மன்னரிடம், அமைச்சர்கள் உணவு உட்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் சிவபூஜை செய்யாமல் உணவு அருந்த மாட்டேன் என மன்னர் திட்டவட்டமாகக் கூறினார். பசியும் களைப்பும் சேர்ந்து அவரை மயக்க நிலைக்குக் கொண்டு சென்றதால், என்ன செய்வது என்று அமைச்சர்கள் திகைத்தனர். அப்போது தளபதிக்கு ஒரு யோசனை தோன்றியது. அருகிலிருந்த மரத்துண்டை எடுத்து மண்ணில் அழுத்தமாக ஊன்றினார். பின்னர், அதனை சுயம்புலிங்கமாகக் கருதி பூஜை செய்யுமாறு மன்னரிடம் தெரிவித்தார். சிவபெருமானின் திருவுருவமாக அதை எண்ணிய மன்னர், முழு பக்தியுடன் வழிபாடு செய்தார். அதன்பிறகு மனநிறைவுடன் உணவு அருந்தினார். சிறிது நேரம் கழித்து இயல்பு நிலைக்குத் திரும்பிய மன்னர், தான் பூஜை செய்த இடத்தைப் பார்த்தபோது அது மரத்துண்டாக இருப்பதை உணர்ந்தார். இருப்பினும், சிவபெருமான் எங்கும் நிறைந்திருப்பார் என்ற நம்பிக்கையுடன், தனது பக்தி உண்மையானதாக இருந்தால் அந்த மரத்துண்டிலேயே லிங்க வடிவில் காட்சி தர வேண்டும் என்று வேண்டினார். மன்னரின் பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்த்ததாக தலபுராணம் கூறுகிறது. மரத்துண்டிலேயே லிங்க வடிவில் சிவபெருமான் காட்சி அளித்தார். இதையடுத்து அந்த இடத்தில் அழகிய ஆலயம் அமைக்கப்பட்டது. மண்ணில் ஆப்பு அடித்ததுபோல் மரத்துண்டு ஆழமாகப் பதிந்து, லிங்க வடிவில் இறைவன் அருள்பாலித்ததால் அந்தப் பகுதி ‘ஆப்பனூர்’ என அழைக்கப்பட்டது.

Advertisement
அங்கு எழுந்தருளிய சிவபெருமான் ‘திருவாப்புடையார்’ என்ற திருநாமம் பெற்றார். மதுரையம்பதியின் பஞ்சபூதத் தலங்களில் நீர் தலமாகவும், மதுரையில் திருஞானசம்பந்தர் பாடிய இரண்டாவது தலமாகவும், பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட நான்காவது கோயிலாகவும் திருவாப்புடையார் திருக்கோயில் சிறப்பிக்கப்படுகிறது. மலைகளில் மேருவும், பசுக்களில் காமதேனுவும், கொடையில் மேகமும் சிறப்புடையவை என்பதுபோல், திருவாப்புடையார் அளவற்ற திருவுள்ளம் கொண்டவர் என்று தலபுராணம் போற்றுகிறது. இத்தலத்தில் அம்பாள் ஸ்ரீசுகந்த குந்தளாம்பிகை என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். ஸ்ரீஅனுக்ஞை விநாயகர், ஸ்ரீமுருகன், ஸ்ரீகாசி விஸ்வநாதர், ஸ்ரீநடராஜர் ஆகியோருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. இத்தலத்தின் தீர்த்தம் இடப தீர்த்தம் என்றும், தலவிருட்சம் கொன்றை என்றும் கூறப்படுகிறது. ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகம் இக்கோயிலின் முக்கிய சிறப்புகளில் ஒன்றாகும். பூஜை நிறைவடைந்ததும், லிங்கத் திருமேனியின் சிரசில் வைக்கப்பட்டுள்ள சாதம் எடுக்கப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்படும். இதனால் வைகை மேலும் புனிதம் பெறும் என்பது ஐதீகம். மீதமுள்ள சாதம் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதத்தை உட்கொண்டால் வியாபாரம் மற்றும் விளைச்சல் பெருகி, குபேர யோகம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. கார்த்திகை மாதத்திலும் திருவாப்புடையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் விசேஷ வழிபாடுகள் நடைபெறும். இக்காலத்தில் திருவாப்புடையாரை வழிபட்டால் செல்வ வளம் பெருகுவதுடன், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். தன்னை நாடி வரும் பக்தர்களின் சிக்கல்களைத் தீர்த்து அருள்பவர் திருவாப்புடையார் என்பது இத்தலத்தின் சிறப்பாகக் கருதப்படுகிறது.

மதிப்பீடு மற்றும் கருத்துகள்
இந்த செய்தி உங்களுக்கு எவ்வளவு பயனுள்ளதாக இருந்தது?
நடப்பு விலைகள்
🥇 Gold ₹14,650
🥈 Silver ₹260.00
Petrol ₹108.47
🛢️ Diesel ₹100.32
TNTAM/26/A7738
📰 நிருபர் ஆக
🏠 முகப்பு தமிழ்நாடு அரசியல் இந்தியா உலகம் சினிமா விளையாட்டு தொழில்நுட்பம் ஆன்மீகம் வேலை & கல்வி வணிகம் சுகாதாரம் வீடியோ சிறப்புக் கட்டுரைகள்
🔍 தேடல் ✍️ கட்டுரை எழுது ℹ️ தகவல் மையம்
📰 செய்தி பதிவிடு