சென்னையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயலிகள் மற்றும் இணையதளங்களை உருவாக்குவது குறித்த மூன்று நாள் முழுநேர பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” என்ற தலைப்பில்இந்தப் பயிற்சி நடத்தப்படுகிறது. செப்டம்பர் 23 முதல் 25-ம் தேதி வரை, காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நிறுவன வளாகத்தில் வகுப்புகள் நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம், தங்களது யோசனைகளை AI அடிப்படையிலான செயலி மாதிரிகளாக (Prototype) உருவாக்குவது குறித்து பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்ளலாம். முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பயன்படுத்தும் No-Code மற்றும் Low-Code AI கருவிகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். ChatGPT, Gemini Pro, NotebookLM உள்ளிட்ட தளங்களைப் பயன்படுத்தி செயலிகளை உருவாக்கும் நேரடி பயிற்சியும் வழங்கப்படும். மேலும், Prompt Engineering முறைகள், AI அடிப்படையிலான இணையதளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம், தனிப்பட்ட மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான தானியங்கி செயல்முறைகள் ஆகியவை கற்பிக்கப்படும். கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தக்கூடிய AI மாதிரிகளை உருவாக்குவது குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. தயாரிப்பு சிந்தனை மற்றும் ஸ்டார்ட்அப் அணுகுமுறையுடன் AI MVP-களை உருவாக்கி, அவற்றை வழிகாட்டிகள் மற்றும் முதலீட்டாளர்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கும் திறனும் வளர்க்கப்படும்.
Advertisement
மாணவர்கள், ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் மற்றும் ஆரம்பநிலை பணியாளர்களுக்கு இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். பேராசிரியர் சான்றிதழ்கள், போட்டிப் பதிவுகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தக்கூடிய AI மாதிரிகளை உருவாக்குதல், Product Manager மற்றும் Solopreneur பணிகளில் பயன்படும் கருவிகளை அறிந்து கொள்வது, வேலைவாய்ப்பு, ஹேக்கத்தான் போட்டிகள் மற்றும் LinkedIn போன்ற தளங்களில் தங்களது திறன்களை வெளிப்படுத்துவது குறித்தும் பயிற்சி வழங்கப்படும். மேலும், AI சார்ந்த தொழில் அல்லது ஃப்ரீலான்சிங் பணியைத் தொடங்குவதற்கான அடிப்படைகள், குறைந்த செலவில் ஸ்டார்ட்அப் யோசனைகளை விரைவாகச் சோதிப்பது போன்ற அம்சங்களும் இதில் இடம்பெறும். யார் பங்கேற்கலாம்? 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் மற்றும் திருநங்கைகள்/திருநம்பிகள் இந்தப் பயிற்சியில் பங்கேற்கலாம். குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், ஓரளவு கணினி அறிவும் அனுபவமும் இருக்க வேண்டும். பங்கேற்பாளர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தங்கும் விடுதி வசதியும் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம். பயிற்சி நிறைவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு [www.editn.in](http://www.editn.in)என்ற இணையதளத்தைப் பார்க்கலாம். அல்லது 8668100181 / 9360221280 என்ற தொலைபேசி எண்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்புகொள்ளலாம். முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.