சிகாகோவில் இறுதி சடங்கு மையத்தில் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் கண்டெடுப்பு - போலீஸ் விசாரணை
அமெரிக்காவின் சிகாகோ நகரில் செயல்பட்டு வந்த தனியார் இறுதி சடங்கு மையத்தில் 50-க்கும் மேற்பட்ட உடல்கள் உரிய பராமரிப்பின்றி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மையத்தை நடத்தி வந்த தம்பதியின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.மேற்கத்திய நாடுகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கு முன்பு, அவற்றை சுத்தப்படுத்தி, புதிய ஆடைகள் அணிவித்து இறுதி சடங்குகளுக்குத் தயார்படுத்தும் பணிகளை இறுதி சடங்கு மையங்கள் மேற்கொள்கின்றன. மேலும், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இறந்தவர்களின் உடலை இறுதியாகப் பார்வையிடவும், நினைவேந்தல் நிகழ்ச்சிகளை நடத்தவும் இத்தகைய மையங்களில் வசதிகள் செய்யப்பட்டிருக்கும்.இந்நிலையில், அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணம் சிகாகோவில் செயல்பட்டு வந்த தனியார் இறுதி சடங்கு மையத்தில் இருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசியதாக அப்பகுதி மக்கள் நகர நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.புகாரைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் அந்த மையத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிய பராமரிப்பு மற்றும் குளிர்சாதன வசதிகள் இன்றி 50-க்கும் மேற்பட்ட உடல்கள் அழுகிய நிலையில் இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, அங்கிருந்த உடல்களை அதிகாரிகள் கைப்பற்றி, அவற்றின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
பல உடல்கள் மோசமாக அழுகிய நிலையில் இருப்பதால், இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, தேவையான சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னரே உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தப் பணிகள் நிறைவடைய பல நாட்கள் ஆகலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்த இறுதி சடங்கு மையத்தை கிளார்க் மோர்கன்-ஜோஹனா மோர்கன் என்ற தம்பதி நடத்தி வந்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும், இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.முதற்கட்ட விசாரணையில், இந்த தம்பதி ஏற்கனவே ஒரு தகன மையத்தையும் நடத்தி வந்ததாகத் தெரியவந்துள்ளது. அங்கு உடல்கள் உரிய பாதுகாப்பின்றி கையாளப்பட்டதாகவும், தகனம் செய்யப்பட்ட பின்னர் கிடைக்கும் சாம்பல் உறவினர்களிடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக அந்த தகன மையத்தின் உரிமம் கடந்த ஆண்டே ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.