ஆந்திரா: 6 தலைமுறையாக சேர்ந்து வாழும் பிரமாண்ட கூட்டுக்குடும்பம்...
ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டம், குர்லப்பள்ளி கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பம், பாரம்பரிய கூட்டுக்குடும்ப வாழ்க்கைக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. இந்தக் குடும்பத்தில் ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த மொத்தம் 83 பேர் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். நான்கு அடுத்தடுத்த வீடுகளில் வசித்தாலும், அனைவரும் ஒரே குடும்பமாகவே அன்றாட வாழ்க்கையை நடத்துகின்றனர். வருமானம், செலவுகள், வீட்டு பொறுப்புகள் உள்ளிட்ட அனைத்தும் பகிர்ந்து நிர்வகிக்கப்படுகின்றன. குடும்ப உறுப்பினர்கள் இணைந்து விவசாயம் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் குடும்ப மூத்தவர்கள் ஆலோசனை நடத்தி, அன்றைய பணிகள், சமையல் மற்றும் விவசாயப் பொறுப்புகளைப் பகிர்ந்து வழங்குகின்றனர். அனைவருக்கும் ஒரே சமையலறையில் உணவு தயாரிக்கப்படுவது இந்தக் குடும்பத்தின் தனிச்சிறப்பாக உள்ளது.தனிக்குடும்பங்கள் அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில், ஒற்றுமை, பொறுப்புணர்வு மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புடன் வாழும் இந்தப் பிரமாண்ட கூட்டுக்குடும்பம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.