ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசம்; முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு
தமிழ்நாட்டில் ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். இந்தத் திட்டம் 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் நடைமுறைக்கு வரும் என்றும், இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று சட்டப்பேரவை கூடிய நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல், உயர்கல்வி, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரம் உள்ளிட்ட துறைகளின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறுகிறது.இந்த நிலையில், சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.ஆண்டுக்கு 3 இலவச சிலிண்டர்கள்
போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்ட முதல்-அமைச்சர் விஜய், ‘அன்னப்பூரணி சூப்பர் 6’ திட்டம் வரும் 2027-ம் ஆண்டு பொங்கல் முதல் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். சிலிண்டருக்கான தொகை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும், இதற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படும்
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடி வரும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தனது ஆதரவு தொடரும் என முதல்-அமைச்சர் விஜய் கூறினார்.
விவசாய நிலங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதால், பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக் கூடாது என்பதில் தான் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
2024-ம் ஆண்டு அக்டோபரில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலேயே பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.தொழில் வளர்ச்சிக்கு விமான நிலையங்களின் முக்கியத்துவத்தை தான் அறிந்திருப்பதாகவும், அதற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் கூறிய விஜய், பரந்தூரில் மட்டும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை ஏற்க முடியாது என்றார்.விவசாய நிலங்களுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையிலும், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று அரசு அதிகாரிகள் மற்றும் துறை வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.அதன்படி, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிடும் என்றும், விமான நிலையம் அமைக்க புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் விஜய் அறிவித்தார். மேலும், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கூறினார்.
அக்.2 முதல் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் விரிவாக்கம்
‘வெற்றிப்பயணம்’ திட்டம் அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார். இதன் மூலம் மாநகரங்கள் மற்றும் நகரங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
பெண்களுக்கான இந்த இலவச பயணத் திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.