அமைச்சர் மரியவில்சனுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஸ்
தமிழக சட்டசபையில் தற்போது மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் மரிய வில்சன், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றம்சாட்டினார்.அப்போது அவர், திமுக ஆட்சியில் பல்வேறு இடங்களில் கட்டாயப்படுத்தி லஞ்சம் பெறப்பட்டதாகவும், அதனால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களில் தானும் ஒருவர் என்றும் தெரிவித்தார். தனது பள்ளிக்கூடத்திற்கே லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறிய அவர், அதற்கு தானே சாட்சி என்றும், சென்னை தியாகராய நகரில் யார் மூலம் பணம் பெறப்பட்டது என்பது குறித்தும் தன்னால் தெரிவிக்க முடியும் என்றும் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக தன் மீது எந்த வழக்கு தொடரப்பட்டாலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.மரிய வில்சனின் இந்த குற்றச்சாட்டுக்கு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமைச்சர் ஒருவர் லஞ்சம் கொடுத்ததாகக் கூறுவது முதற்கட்டத்திலேயே தவறானது என்றார்.
இதுபோன்ற குற்றச்சாட்டு ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்பும் தன் மீது முன்வைக்கப்பட்டதாகவும், அதுதொடர்பாக ரூ.50 கோடி கேட்டு மானநஷ்ட வழக்கு தொடர்ந்ததாகவும் தெரிவித்தார். பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
அமைச்சர் மரிய வில்சன் எந்த அடிப்படையில் இந்தக் கருத்தை தெரிவித்தார் என்பது தெரியவில்லை என்று கூறிய அன்பில் மகேஸ், முதலில் அவரிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும், அமைச்சரை உடனடியாக அழைத்து விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.மேலும், தன் மீது அமைச்சர் மரிய வில்சன் அவதூறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாகவும், அவர்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அனைத்தும் விவகாரத்தை திசைதிருப்பும் முயற்சியாக இருப்பதாகவும் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விமர்சித்தார்.