அதிர்ச்சி சம்பவம்: அரசு பள்ளியில் துப்பாக்கிசூடு நடத்திய மாணவன்; ஒருவர் பலி
தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கை ஒட்டியுள்ள நொந்தபுரி மாகாணத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பும் பலர் காயமடைந்ததும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.பாங்காக்கின் வடமேற்குப் பகுதியில் உள்ள டெப்சிரின் நொந்தபுரி அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றதாக ராயல் தாய் காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். தாக்குதல் நடத்தியவர் அதே பள்ளியில் பயிலும் மாணவர் என உள்துறை அமைச்சகத்தின் நிரந்தரச் செயலாளர் அர்சித் சம்பந்தரத் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகளும் காயங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.கையில் துப்பாக்கியுடன் இருந்த மாணவர் திடீரென பள்ளி வளாகத்தில் சரமாரியாக துப்பாக்கியால் சுடத் தொடங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளை விட்டு அவசரமாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு தஞ்சம் அடைந்தனர்.முதற்கட்ட தகவல்களின் படி, இந்தத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் மீட்புக் குழுவினரும் ஆம்புலன்ஸ்களும் பள்ளிக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் சிகிச்சை பணிகளில் ஈடுபட்டனர்.தாக்குதல் நடத்திய மாணவர் பின்னர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவரையும் சேர்த்து மொத்தம் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.காயமடைந்தவர்களின் சரியான எண்ணிக்கை மற்றும் சம்பவத்தின் பிற விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.இதற்கு முன்பு, கடந்த பிப்ரவரி மாதத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் காவல்துறையினரிடமிருந்து துப்பாக்கியை திருடி, தெற்கு தாய்லாந்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த அந்தச் சம்பவத்தின் போது சிலரை பணயக்கைதிகளாக வைத்திருந்த அவர், ஒருவரை கொன்றதுடன் இருவரை காயப்படுத்தியிருந்தார்.தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொதுமக்கள் அதிகளவில் துப்பாக்கிகளை வைத்திருக்கும் நாடுகளில் தாய்லாந்து முக்கிய இடத்தை வகிப்பதும் குறிப்பிடத்தக்கது.