வன்னியர் சங்கத்தின் 47-வது ஆண்டு: 'முழுமையான சமூகநீதியை அடைய உறுதியேற்போம்' - அன்புமணி ராமதாஸ்
வன்னியர் சங்கத்தின் 47-வது தொடக்க நாளை முன்னிட்டு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூகநீதியை நிலைநாட்டும் நோக்கில் 46 ஆண்டுகளுக்கு முன்பு வன்னியர் சங்கம் உருவாக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.சமூகநீதிக் காவலர் மருத்துவர் அய்யா ராமதாஸ் தொடங்கிய இந்த அமைப்பு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வன்னியர் சங்கத்தின் தொடக்க நாளையொட்டி பா.ம.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் சமூகநீதிக்காக போராடி வருபவர்களுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.தமிழக சமூகநீதி வரலாற்றில் வன்னியர் சங்கம் உருவான நாள் முக்கியமான திருப்புமுனையாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அந்த நாளில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும், அதன் அடிப்படையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக அவர் நினைவூட்டினார்.அதேபோல், வன்னியர் சமூகத்திற்கு மாநில அளவில் 20 சதவீதமும், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் 2 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 18 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், மருத்துவர் அய்யா ராமதாஸ் தொடங்கிய சமூகநீதி இயக்கம் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளதாகவும், மத்திய மற்றும் மாநில அரசுகள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளவுள்ள சூழல், இந்தப் போராட்டத்தின் முதல் முக்கிய சாதனையாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அனைத்து சமூகங்களுக்கும் முழுமையான சமூகநீதியை உறுதி செய்வதே இறுதி இலக்கு என்றும், அந்த நோக்கை அடைய வன்னியர் சங்கத்தின் தொடக்க நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.