‘முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை தமிழக அரசு உயர்த்த முயன்றால் உச்சநீதிமன்றத்தை நாடுவோம்’ - கேரள அரசு எச்சரிக்கை
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் இன்னும் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்று கேரள நீர்வளத்துறை அமைச்சர் மான்ஸ் ஜோசப் தெரிவித்தார். மேலும், அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு மேல் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தால், அதற்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தை அணுகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள 131 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தமிழக அரசு தனது பட்ஜெட்டில் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து கேரள அரசின் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மான்ஸ் ஜோசப், எந்தச் சூழலிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியைத் தாண்டக் கூடாது என்பதில் கேரள அரசு உறுதியாக இருப்பதாகக் கூறினார். 142 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரளா ஒருபோதும் ஒப்புதல் அளிக்காது என்றும், அணையின் பாதுகாப்பு குறித்து தற்போது மிகுந்த கவலை நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் முல்லைப் பெரியாறு அணையில் விரிவான பாதுகாப்பு ஆய்வை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும், அந்த ஆய்வு கடந்த டிசம்பர் 31-க்குள் நிறைவடைந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இதுவரை அடிப்படை பாதுகாப்பு தணிக்கையே நடத்தப்படவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பாதுகாப்பு ஆய்வுகளும், அணையை பலப்படுத்தும் பணிகளும் இன்னும் முழுமையடையாத நிலையில், அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருப்பது வருத்தமளிப்பதாகவும் அவர் கூறினார்.இந்த விவகாரத்தில் இரு மாநிலங்களின் கருத்துகளையும் உச்சநீதிமன்றம் பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்பதே கேரள அரசின் நிலைப்பாடு என மான்ஸ் ஜோசப் தெரிவித்தார்.
தமிழக அரசு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த முயற்சித்தால், கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடும் என்றும், மாநிலத்தின் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.முல்லைப் பெரியாறில் புதிய அணை அமைப்பதே கேரளாவின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருவதாகவும், கேரள மக்களின் பாதுகாப்பையும் தமிழ்நாட்டின் நீர்த் தேவையையும் ஒரே நேரத்தில் உறுதி செய்யும் வகையில் இரு மாநிலங்களின் பரஸ்பர ஒப்புதலுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அரசின் நிலையான நிலைப்பாடு என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாடு - கேரளா இடையிலான இந்த விவகாரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்றும், இரு மாநிலங்களுக்கிடையே தொடர்புகள் இருந்தபோதிலும் நடைமுறை ரீதியில் எந்த முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அமைச்சர் மான்ஸ் ஜோசப் கூறினார்.